
ஐந்துநாள் அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்துவைக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று (02/08/2021) இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார். கோவை சென்று சூலூர் விமானப்படை தளத்திலிருந்து உதகை செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உதகையில் உள்ள ராஜ்பவனில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஓய்வெடுக்கிறார். அப்போது, அங்கு செயல்பட்டுவரும் ராணுவப் பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிடுகிறார். ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, சட்டப்பேரவையிலும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் காவல்துறையினருடன் இணைந்து கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.