ADVERTISEMENT

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

08:28 PM Apr 05, 2024 | kalaimohan

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ADVERTISEMENT

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT