
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மளிகைமேடு பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 26). இரண்டாம் நிலை காவலரான இவர், தற்போது திருச்சி ஐ.ஜி அலுவலக அதி விரைவுப் படையில் சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது செல்போன் பழுதடைந்தது. அதைத் தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடையில் அதைச் சரி செய்யக் கொடுத்தார்.
செல்போனை சரி செய்த கடைக்காரர் கூடுதல் தொகைக் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த காவலர், இவ்வளவு தொகை எதற்கு எனக் கேள்வி எழுப்பியபோது கடைக்காரருக்கும் காவலரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருச்சி கருமண்டபம் ஐ.ஓ.பி நகர் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் சிராஜுதீன் (24) கடை ஊழியர் நூர்தீன் ஆகிய இருவரும் சேர்ந்து காவலரை ஆபாச வார்த்தையால் திட்டி கையால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதீப், கண்ட்ரோல் மென்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிராஜுதீனை போலீசார் கைது செய்தனர்.
Follow Us