சென்னையில் ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான புத்தக திருவிழா வரும் ஜனவரி மாதம் 6ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.

Advertisment

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவை தமிழ்நாடு முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பகத்தார் தங்களின் புத்தகங்களை வெளியிட உள்ளனர். பல லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புத்தகக் கண்காட்சியின் ஒருபகுதியாக கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமும் அமைக்கப்பட இருப்பதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8.30 வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரையும் இந்தப் புத்தக கண்காட்சி நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.