/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ilangovan.jpg)
திருடு விசிடி தயாரிக்க உடந்தையாக இருந்ததாக பத்து திரையரங்குகளுக்கு படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொருளாளர் இளங்கோவன் சேலத்தில்(அக்டோபர் 17, 2018) மேலும் கூறியது:
திருட்டு விசிடி தயாரித்ததாக குற்றம்சாட்டி, தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள பத்து திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வடசென்னை திரைப்படத்திற்காக சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் தொகை செலுத்தி இருந்த நிலையில், அவர்களுக்கு படத்தை வழங்க மறுத்துள்ளனர்.
எனவே நாளை (அக். 18, 2018) முதல் சண்டக்கோழி&2 உள்ளிட்ட அனைத்து புதிய திரைப்படங்களையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
இதற்கிடையே, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பத்து திரையரங்குகள் விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி, வழக்கம்போல் நாளை புதிய படங்களை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் இளங்கோவன் கூறினார்.
மேலும், தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் வரும் 23ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில், திரைத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, யாரும் பாதிக்காத வகையில் சுமூக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் இளங்கோவன் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)