cctv cameras erode police sp press meet

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்த ரேகா என்ற பெண், கழுத்துஅறுத்து படுகொலைசெய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை தொடர்பாக செந்தில் குமார் என்ற பெயிண்டரை கைது செய்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சி.சி.டி.வி.யில் பதிவானகாட்சியில் கொலை செய்தவரின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த நபரை ஒரே நாளில் மடக்கிப் பிடித்தனர்.

Advertisment

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், "குற்றச் சம்பவங்களை தடுக்க மற்றும் அவற்றை கண்டுபிடிக்க 'மூன்றாவது கண்'என அழைக்கப்படும் சி.சி.டி.வி கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு இந்த கேமராக்களின் பயன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஈரோடு மாநகரில் முக்கியச் சாலை மற்றும் சாலை சந்திப்புகளில் மாவட்ட காவல்துறை சார்பில் சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தி உள்ளோம். ஏற்கனவே 320 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் கூடுதலாக 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 415 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறன.

சி.சி.டி.வி. கேமராக்களின் பயன்பாடு மிக அத்தியாவசியமானது. பொதுமக்கள் இதன் பயன்பாட்டை உணர்ந்து வீடுகளில் பொருத்தவேண்டும். மிகக் குறைந்த விலையிலேயே இன்று தரமான சி.சி.டி.வி கேமராக்கள் கிடைக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். ஈரோட்டில் ஏற்கனவே 320 கேமராக்கள் காவல்துறையால் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 415 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும். பொதுமக்கள் அவசர நேரங்களில் போலீசாரை அணுகுவதற்கு 'காவலன் எஸ்.ஓ.எஸ்' செயலி உள்ளது. இதைப் பெண்கள் தங்களது ஸ்மார்ட் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு அவசரத் தேவைக்கு அழைக்கலாம். மேலும் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம்" என்றார்.