
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுராம்பட்டினம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி, உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த கடந்த 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. உரிய அங்கீகாரம் இல்லாததால், இப்பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 19 பேருக்கு, பள்ளி நிர்வாகம் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வழங்காமல் இருந்துள்ளனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி மனு கொடுத்தனர். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் (N.I.O.S. - National Institute of Open Schooling) மூலம் தேர்வு எழுதலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக தேர்வு எழுத முடியாமல் போன சிபிஎஸ்இ மாணவர்கள், மாநில பாடப்பிரிவில் கீழ் தேர்வு எழுதலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, மாநில பாடத் திட்டத்தின் கீழ் மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரிலும், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுத்து சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.