
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுராம்பட்டினம் என்ற இடத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த பள்ளியில் 19 மாணவ மாணவிகள் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் நாளை (15.02.2025) சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இருப்பினும் இந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது.
அதோடு பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனித் தேர்வாளராகத் தேர்வு எழுத மாணவர்களை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (14.02.2025) மனு கொடுத்தனர். அப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான உரிய அங்கீகாரம் இல்லாமல் கடந்த ஒரு வருட காலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்ததாகப் பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவர்கள், பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்ற மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த மாணவர்கள் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் (N.I.O.S. - National Institute of Open Schooling) மூலம் மார்ச் மாதம் விண்ணப்பித்து ஏப்ரல், ஜூன் மாதங்களில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அங்கீகாரம் பெறாத காரணத்தால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சம்பவம் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.