Advertisment

குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும்-ஸ்டாலின்  

குரூப்-1 தேர்வில் நடந்துள்ள முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்றுஅவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பதும், இந்த மோசடி மூலம் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதவிகளில் தேர்வாகி இருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள செய்திகளும் அதிர்ச்சியை அளிக்கின்றன. வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து இரவுபகலாக படித்தும், வெளியூர்களில் இருந்து குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருந்தும் கடன் வாங்கிக் கொண்டு வந்து, சென்னையில் தங்கியிருந்து படித்தும் குரூப்-1 தேர்வுகளை எழுதுகிறார்கள்.

stalin

ஆனால், 2016 ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில், 74 பதவிகளுக்கு மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்கள் 62 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும், இந்த மையத்தில் வழங்கப்பட்ட மாதிரித் தேர்வுகளில் உள்ள கேள்விகளில் 60 சதவீதம் கேள்விகள் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்டுள்ளன என்பதும் மிகப்பெரிய மோசடியாகவும், நேர்மையாகத் தேர்வு எழுதும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

Advertisment

இந்தத் தேர்வில் இமாலய முறைகேடு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமலும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு உதவியாகவும் சென்னை மாநகரக் காவல்துறையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் மாபெரும் துரோகச் செயலாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திற்கு எப்படிக் கிடைத்தது? அதற்கு உடந்தையாக இருந்த முக்கிய புள்ளிகள் யார்? என்பது பற்றியெல்லாம் காவல்துறை விசாரிக்காமல் இருப்பது உள்ளபடியே வேதனை மிகுந்ததாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி, 18.1.2018 அன்று அப்பல்லோ பயிற்சி மையத்தில் நடைபெற்ற காவல்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்பேசிகளில் இருந்த தொலைபேசி எண்கள் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்தது ஏன்? ஒரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளில் சத்துணவு சமையல்காரர் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளவர்களும், மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையமும் ரகசியக் கூட்டணி வைத்து முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஈனச்செயல்கள் எல்லாம் அதிமுக அரசின் புரையோடிப் போன ஊழலுக்கான கறைபடிந்த சாட்சியங்களாக இருக்கின்றன. கேள்வித்தாள், தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்துவது, நேர்முகத்தேர்வின் போது மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட நான்கு கட்டங்களாக நடைபெற்ற 2016 குரூப்-1 தேர்வில், டி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து சத்தியம் தொலைக்காட்சியில் செய்தியாக வெளி வந்தபோது, அந்தத் தொலைக்காட்சி மீதே நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புகார் அளித்து, இந்த இமாலய முறைகேடுகளை ஒட்டுமொத்தமாக மூடி மறைக்க நடைபெற்ற சதிகளும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் பின்னணியில் முன்னாள் மேயரும், அதிமுகவின் முக்கிய புள்ளியுமான சைதை துரைசாமியிடம் காவல்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை. அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு முன்ஜாமின் அளிப்பதை அதிமுக அரசு எதிர்க்கவில்லை. குரூப்-1 தேர்வில் நடைபெற்றுள்ள மிக மோசமான இந்த முறைகேட்டை மூடி மறைக்க அதிமுக அரசு வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆகவே, சென்னை மாநகர காவல்துறையிடமிருந்து இந்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த முறைகேட்டிற்குத் துணைபோன தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உயரதிகாரிகள், மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்டவர்களைக் காலம் தாழ்த்தாமல் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2016 குரூப்-1 தேர்வு மட்டுமின்றி, இந்தப் பயிற்சி மையத்தின் முறைகேடுகள் அரசின் மற்ற போட்டித் தேர்வுகளிலும் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் கூறியுள்ளார்.

edappadi pazhaniswamy crorepati CM exam stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe