திருப்புவனம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை!

thirupuvanam-police-station

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. 

இதற்கிடையே இந்த வழக்கைத் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தனர். மற்றொருபுறம் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தரால் இது தொடர்பாக நடத்திய விசாரணையின் அறிக்கையும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனையடுத்து இந்த அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி. மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து அறிக்கையைப் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் மடப்புரம் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று (14.07.2025) சென்று, அஜித்குமாரை வைத்து அடித்த இடத்தையும் அவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். அதோடு ஒரு சில இடங்களைப் புகைப்படங்களாகவும் எடுத்துக் கொண்டனர். 

மேலும் உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஊழியரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கார் பார்க்கிங் பகுதிக்கும் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (15.07.2025) விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது 15 நிமிடங்கள் நீடித்தன. அப்போது நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படை என்ன?. காவல் நிலையத்திற்கு அஜித்குமார் அழைத்து வரப்பட்ட நேரம், அங்கிருந்து அஜித்குமார் வெளியேறிய நேரம் உள்ளிட்டவை குறித்தும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். 

CBI investigation Investigation police station thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe