தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் செயல் இயக்குநர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும், பங்குச் சந்தையின் செயல் இயக்குநராகவும் இருந்தவர் ஆனந்த் சுப்பிரமணியம். தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக கடந்த 2016- ஆம் ஆண்டு வரை இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையைச் சேர்ந்த யோகி ஒருவரின் யோசனையைக் கேட்டு முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், ஆனந்த் சுப்பிரமணியத்தை இந்த முக்கிய பதவியில் நியமித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது முதல் சந்தை சார்ந்த முக்கிய முடிவுகளில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆனந்த் சுப்பிரமணியம் அழுத்தம் கொடுத்து எடுக்க சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, சென்னையில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியம் தொடர்புடைய இடங்களில், அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஆனந்த் சுப்பிரமணியத்தை நேற்று (24/02/2022) இரவு சென்னையில் சி.பி.ஐ. கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.