
தென்காசி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான சங்கரன்கோவில் நகரின் பத்திரப்பதிவான சப்ரிஜிஸ்டர் அலுவலகம் எந்நேரமும் பரபரப்பிலிருக்கும். அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதன்மை இடத்திலிருப்பது, நிலம் மற்றும் பிற இனங்கள் தொடர்பான பத்திரம் பதிவு செய்கிற சார் பதிவாளர் அலுவலகங்கள்.
சங்கரன்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 21.01.21 அன்று பிற்பகல் வழக்கறிஞருடன் வந்த மூன்று பேர்கள் தாங்கள் வாங்கிய நிலங்களை பதிவு செய்யும்படி முறைப்படி சார்பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளனர். அதனை ஆய்வு செய்த சார் பதிவாளர் அவைகள் டெல்லி சி.பி.ஐ. மற்றும் நீதிபதி கமிட்டியினரால் தடை செய்யப்பட்டவைகள் என ஆணையைச் சுட்டிக்காட்டியவர் பதிவு செய்ய மறுத்திருக்கிறார். அதுசமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பத்திரப்பதிவின் பொருட்டு வந்த பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு ரகளையான நேரத்தில் போலீசார் வந்து சமாதானப்படுத்தி அமைதி ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவின் பொருட்டு வரும் பொதுமக்களுக்கும், பத்திர எழுத்தாளர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குப் பாதுகாப்பில்லை. காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திர எழுத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது நகரைப் பரபரப்பாக்கிவிட்டது. மட்டுமல்ல பதிவுத்துறையின் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி வரை தகவல் போய் ஹாட்டாபிக் ஆனதுடன் விசாரணை வளையத்திற்கும் சென்றிருக்கிறது.

இதுகுறித்துப் பதிவுத் துறையின் சார்பதிவாளரான ஈஸ்வரன் நம்மிடம், அன்றையதினம் கண்மாப்பட்டியின் முருகன் என்பவர் இரண்டு பேர்களுடன் வந்து சில சர்வே நம்பர்களைக் கொடுத்து ஆவணப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். அவர்கள் கொடுத்த அனைத்து சர்வே நம்பர்களும் பதிவுத் துறைத் தலைவர், நீதிபதி லோகா கமிட்டியின் JRMLC/PACL/AKD/4617/19825/1/2019 01.08.19ன் படியும், டெல்லி சி.பி.ஐ.யின் NO 2000 RC BD 1/2014/E/0004/CBI/BS/7FV நியுடெல்லி 14.05.18 நாளிட்டது மற்றும் பதிவுத் தலைவரின் கடிதங்கள் ஆகிய தடையாணையின்படி PACL நிறுவனத்திற்குச் சொந்தமான தடைசெய்யப்பட்ட சொத்துக்கள் என்றதனைச் சுட்டிக் காட்டிப் பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்தேன்.

மாறாக அவர்கள் பத்திரப் பதிவுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் கடுமையான வாக்குவாதம் செய்தனர். ஒருமையில் பேசினர். தகாத வார்த்தைகள் விடுத்தனர். இதனால் அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் ஈடுபட்டனர். பிறகே போலீஸ் வந்தவுடன் நிலைமை கட்டுக்குள் வந்தது. இவைகளைனைத்தையும் குறிப்பிட்டு நகர காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன். பதிவுத்துறையின் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி.வரை புகாரைத் தெரிவித்துள்ளேன் என்றார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகளை ஏற்பட்டதன் விளைவாய், பத்திர எழுத்தர்கள் அனைவரும் நடவடிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் சார்பிலோ, பதிவுத் தடையிருப்பின் அதனை முறையாகச் சட்டப்படி நீதிமன்றம், விசாரணை என்றிருக்கிறது. அங்கே முறையிட்டு எதிர் கொள்ள வேண்டுமே தவிர, பத்திரவுப் பதிவிற்கும் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாதவாறு குந்தக நடவடிக்கையில் ஈடுபட்டால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினர்.
இதுகுறித்து நாம், புகார் மற்றும் சம்பவத்திற்குரியவர்களில் ஒருவரான ரவியைத் தொடர்பு கொண்டு கேட்டதில். PACL எனப்படும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களில் 4 நம்பர்கள் 29.12.20 அன்று ஏற்கனவே அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டியும், தடை செய்யப்பட்டதில் எங்களின் ஒரு நம்பர் மட்டுமே வருவதால் அதனைவிடுத்து தடையில்லாத இதர எங்களின் நம்பர் நிலங்களைப் பதிவு செய்யச் சொன்னதில் மறுத்தார். எங்களை சார் பதிவாளர் அலையவிட்டார். நாங்கள் யதார்த்தத்தைத் தான் சொன்னோமே தவிர சட்டத்திற்குப் புறம்பான வகையில் நடந்து கொள்ளவில்லை என்றார். ஆனாலும் டெல்லி சி.பி.ஐ. மற்றும் நீதிபதி கமிட்டியின் தடையாணை தொடர்பான இச்சம்பவம் விவகாரமாகி சூட்டைக் கிளப்பியிருக்கிறது.