100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இன்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி போலி ஆவணங்கள் பதித்து 22 ஏக்கர் நிலத்தை பறித்துக் கொண்டதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் என 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாகஎம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கவின் என்பவர் வீட்டில் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.