தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி அதற்கானவரத்து வாய்க்கால்களை சீரமைத்திருந்தாலே தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், வரத்து வாய்க்கால் என்று அரசாங்க கணக்கில் இருக்கிறது. ஆனால் இடத்தில் இல்லை. அத்தனையும் ஆக்கிரமிப்புகள், மற்றொரு பக்கம் செடிகொடிகளின் ஆக்கிரமிப்பு. இதனால் பருவமழை மட்டுமல்ல எங்கோ பெய்யும் மழைத் தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடிவந்தாலும் தமிழகத்தில் அந்த தண்ணீரை தேக்கிவைத்து பயன்படுத்த வழியில்லாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் தண்ணீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும். சேமித்த நீரை பயன்படுத்த வேண்டும் என்று கோடிகோடியாக செலவு செய்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அந்த பணத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தாலே தண்ணீரை சேமித்துவிடலாம். இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் மராமத்து இல்லாத நீர்நிலைகளால் மழைத் தண்ணீரும், காவிரித் தண்ணீரும் வீணாகி கடலுக்கு செல்கிறது.

Advertisment

Cauvery water to go to sea .. Request to clear water bodies!

இந்தநிலையில்தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்குட்பட்ட ராஜாளிக்குளம் செல்லும் கிளை வாய்க்கால், கடந்த 15 வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நான்கு முக்கியக் குளங்களில் தண்ணீர் நிரப்ப முடியாமல் வறண்டு கிடக்கின்றன.

கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதியைச் சேர்ந்த ராஜாளிக்குளம், கருந்தல்குண்டு, மிதியக்குடி மற்றும் அய்யனார் கோயில் குளம் ஆகியவற்றில் தண்ணீர் இல்லாததால், இதன் மூலம் பாசனவசதி பெறும் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.

Advertisment

Cauvery water to go to sea .. Request to clear water bodies!

இக்குளங்களுக்கு கல்லணை தண்ணீர் வந்து நிரப்புவது வழக்கம். ஆனால் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் வரும் மடைகள், ஷட்டர்கள் அடைபட்டுக் கிடப்பதால், இக்குளங்கள் வறண்டு போய் காணப்படுகிறது. குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களில் மரம், செடிகொடிகள், புதர்கள் மண்டிக் கிடப்பதாலும், கஜா புயலால் விழுந்த மரங்கள் சாய்ந்து கிடப்பதாலும், வரத்துவாரிகள் அடைபட்டுள்ளது.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி கூறுகையில், "தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், நீர்நிலைகளை தூர்வாருவதில் அலட்சியப் போக்கான நிலையே காணப்படுகிறது. ஒட்டங்காடு பகுதியில் பல ஆண்டுகளாகவே நீர்நிலைகள் தூர்வாரப்படாமலேயே உள்ளன.

Cauvery water to go to sea .. Request to clear water bodies!

இதுகுறித்து, ஊராட்சிமன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு, தண்ணீர் வீணாகி கடலில் சேரும் நிலையில், இப்பகுதி நீர்நிலைகள் வறண்டுபோய் மண்மேடிட்டு காணப்படுவது வேதனையளிக்கிறது.

எங்கள் பகுதி நீர்நிலைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, வரத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தர ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.