Skip to main content

காவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி; சீமான்

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
seeman


காவிரிச் சிக்கலுக்கும், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புத் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி; கூட்டாட்சித் தத்துவத்திற்குச் செய்யப்பட்டப் பச்சைத்துரோகம் என  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ எனும் முதுமொழிக்கேற்ப பின்னிப் பிணைக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றுத்தொடர்பைக் கொண்டிருக்கிற தமிழகத்திற்கும், காவிரி நதிநீருக்குமான உறவை முறிக்கும் விதமாகக் காவிரி நீரை தமிழகத்திற்குத் தர மறுத்து கர்நாடக அரசும், மத்தியில் ஆளுகிற பாஜக அரசும் வஞ்சித்து வருகிற சூழலில் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக நாம் நம்பி நின்ற உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு அநீதி இழைத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. இத்தீர்ப்பு முடிவு காவிரி நதிநீர் உரிமையினைத் தமிழகத்திடமிருந்து மெல்ல மெல்லப் பறித்து அதனை முழுமையாகக் கர்நாடகாவுக்கு உரியதாக மாற்ற முனைகிற சதிச்செயலோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத்தீர்ப்பில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. பிறகு, 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பில் அதில் 12 டி.எம்.சி. குறைத்து ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்குத் தரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்தன. இதில் தமிழகம் 192 டி.எம்.சி.யுடன் கூடுதலாக 72 டி.எம்.சி. சேர்த்து 264 டி.எம்.சி. வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஆனால் முன்பு வழங்கப்பட்டுள்ள அளவைவிட 14.75 டி.எம்.சி தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்திற்குத் தரப்படும் என்கிற இத்தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இந்தியா எனும் பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கும் அதற்கென்றே இறையாண்மை உள்ளது. இவ்வினத்திற்குள் நதிநீர் பங்கீடு போன்ற வாழ்வாதாரச் சிக்கல்களில் அனைத்து இனங்களுக்கும் சரியான சமமான நீதியை வழங்குவதில்தான் இந்தியாவின் ஒருமைப்பாடும், இறையாண்மையும் அடங்கியுள்ளது. ஆனால் இக்காவிரி நதிநீர் சிக்கலுக்கும், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது திட்டமிட்டுத் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டப் பெரும் அநீதியாகும். இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகமாகும்.

காவிரி ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமல்ல எனத் தீர்ப்பளித்துவிட்டு, ஒரு மாநிலத்தின் நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு தீர்ப்பு வழங்கி இருப்பது பெரும் முரணாகும். விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட பாசனப்பரப்பை 11 இலட்சம் ஏக்கர் பரப்பிலிருந்து 14 இலட்சம் ஏக்கர் வரை விரிவுப்படுத்தி, காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலக் கொட்டம் அடித்து வரும் கர்நாடக அரசைக் கண்டிக்காது அவர்களுக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்கியிருப்பது வருந்தத்தக்கது.

ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி நதிநீர் உரிமையைத் தமிழர்களிடமிருந்து பறிக்கும் பச்சைத்துரோகமாகும். தமிழக அரசு விரைந்து செயலாற்றி இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யத்தக்க வழிகள் இருக்கிறதா எனச் சட்ட வல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து காவிரி நதிநீர் உரிமையை மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்