Advertisment

'தமிழக உரிமையைப் பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்'- மு.க.ஸ்டாலின்!

cauvery management board dmk mk stalin

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை, மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய அரசு, தற்போது இந்த 'காவிரி ஆணையத்தையும்'தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது அநீதியானது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அ.தி.மு.க. அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்சநீதிமன்றத்தில் 14.75 டி.எம்.சி நீரைக் கோட்டைவிட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த 'காவிரி மேலாண்மை வாரியத்தையும்'கை நழுவவிட்டது. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்து.அதன் அடிப்படையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டைச் செயல்படுத்துவதற்கு ஒரு 'வரைவுத் திட்டத்தை'ஆறு வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும்,பல்வேறு காரணங்களைச் சொல்லிஅந்தக் காவிரி இறுதி வரைவுத் திட்டத்தை மூன்று மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்” எழுச்சி காரணமாகவும், உச்சநீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், ஒருவழியாக 18.5.2018 அன்று “காவிரி வரைவுத் திட்டத்தை” அறிவித்தது மத்திய பா.ஜ.க. அரசு.

காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்மக்கள் மன்றத்தில் எல்லாம் சுட்டிக்காட்டியும், அதையெல்லாம் நிராகரித்து, “அதிகாரம் பெற்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது” என்று பொய்வாதம்செய்து பொழுதைப் போக்கினார் முதலமைச்சர் பழனிசாமி.

பொம்மைஅமைப்பாக அமைக்கப்பட்ட இந்தக் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே “பொறுப்புத் தலைவராக” நியமித்து இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது.

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது போல், மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவோ, தமிழ்நாட்டின் நீர் உரிமையை நிலைநாட்டவோ, இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் கூடிக் கலையும் அமைப்புகளாகவேஇன்றுவரை இருந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, இந்த உரிமைப் பறிப்பு வைபவங்களைஎல்லாம் ஒய்யாரமாக அனுமதித்துமத்திய பா.ஜ.க. அரசுக்குப் பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு.

வெறும் எலும்புக்கூடுஅமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20- க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது. ஆனால், இந்தக் குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பா.ஜ.க. அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை.

கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுத்து- வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் தமிழகம் பெற்றும்மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர்என்ற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு முன்மொழியஅதை வழிமொழிந்துவிவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் 'விவசாயி'புகழ் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழக காவிரி நதிநீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக் கொடுத்து- நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

இது போதாது என்று, இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து- அது தன்னாட்சி அமைப்பு அல்ல- மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட கைகட்டிநிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்.காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்.தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல்.

http://onelink.to/nknapp

ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பிறப்பிக்கப்பட்டுள்ள 24.4.2020- ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பழனிசாமி உடனடியாகத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Cauvery management board DMK MK STALIN government
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe