Advertisment

காவிரி ஆணைய உரிமை பறிக்கும் மோடி அரசுக்கு எடப்பாடி அரசு துணை போவதேன்? பெ. மணியரசன் கண்டனம்!

காவிரி ஆணைய உரிமை பறிக்கும் மோடி அரசுக்கு எடப்பாடி அரசு துணை போவதேன்? என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

P. Maniyarasan

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னதிகாரமுள்ள அமைப்பாக செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) அமைச்சக அதிகாரத்தின் கீழ் செயல்படும் கீழமை அலுவலகமாக நரேந்திர மோடி ஆட்சி மாற்றியுள்ள அநீதியைத் தமிழ்நாடு அரசு ஆதரித்து, அதனால் ஆபத்தில்லை என்று அறிக்கை கொடுத்திருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், 29.04.2020 அன்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், தனித்தனியே செயல்பட்ட இரண்டு துறைகளை இணைத்து நடுவண் அரசு ஜல்சக்தி (நீராற்றல்) அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது, அதற்கான விதிகளில் செய்துள்ள திருத்தங்களைத்தான் நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இது காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அதிகாரங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை, இதுகுறித்து நடுவண் அரசு அதிகாரிகளைக் கேட்டு உறுதி செய்து கொண்டோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுவண் நீராற்றல் துறையின் அன்றாட நிர்வாகப் பணி விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஏற்கெனவே உள்ள விதி 7ஐ அடுத்து 7A சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 7A-யின்படி இனிமேல் ஆறுகளின் தண்ணீர்ப் பாதுகாப்பு, வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு ஆகியவை சார்ந்த அதிகாரங்கள் நடுவண் நீராற்றல்துறை அதிகாரத்தின் கீழ் வரும்.

அடுத்து, ஏற்கெனவே உள்ள விதி 33-க்குக் கீழ் 33A, B, C, D, E பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி 33C - கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம், 33D – கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், 33E – காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை நடுவண் அரசின் நீராற்றல் துறையின் அன்றாட நிர்வாக விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வரையறுத்தத் தன்னதிகார விதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று 16.02.2018 அன்று உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒட்டுமொத்தப் பணிகளை அதன் தலைவர் மற்றும் அதிகாரிகள் தீர்மானித்துச் செயல்படுத்துவார்கள். இதன் அன்றாடப் பணிகளைகாவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதிகாரிகளும் செயல்படுத்துவார்கள். இவற்றின் கூட்டத்தைக் கூட்டுவது, நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, முடிவுகளைச் செயல்படுத்துவது உள்ளிட்ட அதிகாரங்கள் இவ்விரு அமைப்புகளிடம் இருக்கின்றன. இப்பணிகளில் நடுவண் நீராற்றல் (ஜல்சக்தி) துறை தலையிட எங்கே இடம் இருக்கிறது? இனிமேல் மோடி அரசு ஓட்டை போட்டால்தான்! அந்த ஓட்டைகள்தாம் திருத்தம் 7A மற்றும் 33 A, B, C, D, E ஆகியவை.

இந்த ஓட்டைகளை அடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு – இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இவற்றை ஆதரித்துப் பக்கவாத்தியம் வாசிப்பது ஏன்? தமிழ்நாட்டில் இந்த விதித் திருத்தங்கள் தொடர்பாக மக்களிடம் – கட்சிகளிடம் – உழவர் அமைப்புகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுபற்றி வெளிப்படையாக விளக்க அறிக்கை கொடுங்கள் என்றாவது இந்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டிருக்கலாம் அல்லவா? இதையெல்லாம் விடுத்து, தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் வஞ்சகச் செயலுக்கு எடப்பாடியார் வாழ்த்துக் கூறுகிறார்.

2018 சூன் மாதத்திலிருந்து செயல்படும் காவிரி ஆணையத்திற்குத் தனிப்பொறுப்புள்ள முழுநேரத் தலைவர் ஒருவரை அமர்த்தும்படி வாதாடிப் பெற்றாரா முதலமைச்சர்? இல்லை! நடுவண் நீர்வள ஆணையத்தின் தலைவரின் ஓய்வுநேரப் பணியாகக் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பணி தொடர்கிறது.

ஏற்கெனவே நீர்வளத்துறை என்று செயல்பட்ட இன்றைய நீராற்றல்துறை தானே கர்நாடகம் மேகதாதுஅணை கட்டப் பச்சைக் கொடி காட்டி அதனிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை வாங்கி வைத்துள்ளது! இதே நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடும்போதெல்லாம், மேக்கேதாட்டு அணை கட்டுவது பறறிய பொருளை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து வைத்து வருகிறார். இனி தமிழ்நாட்டு எதிர்ப்பைத் துச்சமாக ஒதுக்கிவிட்டு மேக்கேதாட்டு அணை கட்ட இந்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது.

கரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிறது மோடி அரசு. அதற்குத் துணைபோய் துரோகம் இழைக்கிறது எடப்பாடி அரசு. நீராற்றல் துறையின் திருத்த விதிகளைக் கைவிடச் செய்ய ஊரடங்கைக் கடைபிடித்துக் கொண்டே போராடுவோம்! இதற்கான அறப்போராட்டத்தை முடிவு செய்வதற்கு 01.05.2020 அன்று காவிரி உரிமை மீட்புக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு காணொலி வழியில் நடக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisment

cauvery issue statement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe