Advertisment

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசுடன் சேர்ந்து பினாமி அரசு கூட்டுத் துரோகமா? ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுடன் சேர்ந்து பினாமி அரசு கூட்டுத் துரோகமா என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இச்சிக்கலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழகஅரசு, மவுனமாகியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். அதனால் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அடுக்கக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் தில்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. யோசனை தெரிவித்தது. அதன்படியே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய தமிழக அரசு, அதன்பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியாக இல்லாமல் விலகிச் செல்கிறது.

opseps

காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்களை பிரதமரிடம் சந்திக்க தமிழக அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகக் குழுவை சந்திக்க பிரதமர் தயாராக இல்லை என்ற தகவல் மத்திய அரசிலிருந்து தெரிவிக்கப்பட்ட பின், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பினாமி முதலமைச்சரோ எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் அழைத்துப் பேசினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை என்றாலும் கூட, பிரதமருடனான சந்திப்புக் குறித்து திங்கட்கிழமைக்குள் சாதகமான முடிவு வரக்கூடும் என்றும், அவ்வாறு எந்த தகவலும் வரவில்லை என்றால் 8&ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் அரசுத் தரப்பில் கசியவிடப்பட்டன.

ஆனால், திங்கட்கிழமை மத்திய அரசிடமிருந்து சாதகமான தகவல்கள் எதுவும் வரவில்லை. மாறாக, காவிரிச் சிக்கல் குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட 4 மாநில தலைமைச் செயலர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கூட்டத்தால் தமிழகத்திற்கு 10 பைசாவுக்குக் கூட பயன் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்துவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் மற்றொரு தந்திரம் தான் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்றாலும் கூட, பிரதமரை சந்திப்பதற்கான அழுத்தங்கள் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ தலைமைச் செயலர்கள் கூட்டத்தால் எல்லா சிக்கலும் தீர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அதையே நம்பிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலிலாவது மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு விவாதித்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவரிடம் மட்டும் துணை முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தலைமைச் செயலர்கள் கூட்டத்தை மத்திய அரசு நாளை மறுநாள் கூட்டியிருப்பதால், அதற்குப் பிறகு சட்டப்பேரவையைக் கூட்டலாம் என்று துணை முதலமைச்சர் கூறியதாகவும், அதற்கு தாமும் ஒப்புக் கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் தமிழகத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும் விதம் கவலையும், வேதனையும் அளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது முற்றிலும் பயனற்ற நடவடிக்கை. அதனால், மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் ஏற்படப் போவதில்லை. மாறாக, மத்திய அரசை அசைத்துப் பார்க்கக்கூடிய வகையில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. ஆனால், குறைந்தபட்சமாக பேரவையைக் கூட்ட தயாராக இல்லாமல் தமிழக அரசு பின்வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் துணை போயிருப்பது வெட்கக்கேடானது. காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டும், கூட்டணி அமைத்தும் தாரை வார்ப்பது இன்றும் தொடர்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுடன் பினாமி அரசும் இணைந்து கூட்டுத் துரோகம் செய்யக்கூடாது.

Ramadhoss

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 20 நாட்களாகி விட்டன. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு 14 நாட்களாகி விட்டன. உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிய இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்னும் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திலும் எந்த முடிவும் ஏற்படப் போவதில்லை. அது காலந்தாழ்த்தும் நடவடிக்கை தான். இன்னும் கேட்டால் நாளை மறுநாள் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தடுத்துக் கூட்டங்கள் கூட்டப்படக் கூடும் என்று மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.ராவ் கூறியிருக்கிறார். அது முடியும் வரை தமிழக அரசு காத்திருந்தால் காவிரியில் தமிழகத்திற்குரிய கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் மத்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு பறித்துச் சென்று விடும்.

காவிரி விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய இந்நேரத்தில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த உரிமையையும் சமரசம் செய்து கொள்ளக்கூடிய அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது தான் பெரும் சாபக்கேடு ஆகும். தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும் வேளையில், மண் புழு அளவுக்கூட எதிர்ப்புத் தெரிவிக்காமல் தமிழக அரசு அடங்கிக் கிடப்பது வேதனை அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு உணர்வு பெற்று மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகுவது, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தில்லிக்குச் சென்று தொடர் போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட எந்த முடிவை அரசு எடுத்தாலும் அதற்கு ஒத்துழைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Joint betrayal? Central Government Condemned Ramadoss Tamil Nadu government cauvery issue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe