காவிரி வாரியம்: உச்சநீதிமன்றத்தின் முடிவு தமிழகத்திற்கான நீதியை தாமதமாக்கும்! அன்புமணி

anbumani ramadoss

காவிரி வாரியம் அமைப்பதற்கான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு தமிழகத்திற்கான நீதியை தாமதமாக்கும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்காத நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான புதிய திட்டத்தை மே மாதம் 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் தாமதத்தையும், தமிழகத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கம் கோரும் மனு ஆகியவற்றை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் விஷயத்தில் கடைசி நாள் வரை காத்திருந்து விட்டு, கெடு முடிவடைந்த பின்னர் விளக்கம் கோரும் மனு தாக்கல் செய்ததற்காக கண்டனம் தெரிவித்துள்ளது. இது மிகச்சரியான நடவடிக்கை ஆகும். இதன்மூலம் காவிரி சிக்கலில் மத்திய அரசு ஒரு சார்பாக நடந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக, வரைவுத் திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது கால தாமதத்திற்கு வழிவகுக்கும். மே மாதம் 12-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், மே 3-ஆம் தேதி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தாமதிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை மத்திய அரசு வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்தால் கூட அது கர்நாடகத்திற்கு சாதகமானதாக இருந்தால் அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கும்; தமிழகத்திற்கு சாதகமாக இருந்தால் கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் வரும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என்பதால், தொடர்ந்து 7&ஆவது ஆண்டாக அடுத்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இது உழவர்களின் துயரங்களை அதிகரிக்கும்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான திட்டத்தை அமைக்க மத்திய அரசின் சார்பில் 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இப்போது மே மாதம் 3=ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் இப்போதே மத்திய அரசுக்கு 5 வாரங்கள் அவகாசம் கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விரைவுபடுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தனி மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த சிக்கல் மே மாதத்தைக் கடந்தும் நீடிக்குமானால் குறுவை சாகுபடிக்கான தண்ணீரைப் பெறுவதற்கான இடைக்கால ஆணையையாவது பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe