
10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பாகத் தமிழ்நாடுஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீட்டில்தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கானது மட்டுமல்ல, 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கும், அருந்ததியினர் பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரப்பட்டது. ஒட்டுமொத்த நிர்வாகமும் இந்த தடை உத்தரவின் மூலம் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளது' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us