
ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக டூவீலர்கள் அதிக அளவில் திருடப்படும் சம்பவம் நடந்து வருகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், 26ஆம் தேதி இரவு ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அதில், அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அந்த இளைஞரிடம் துருவித் துருவி விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த காக்கிச்சட்டை என்கிற முருகேசன் என்பதும், இவர் பிரபலமான மோட்டார் சைக்கிள் கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, “காக்கிச்சட்டை என்கிற முருகேசனுக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கபிலர் மலை பகுதி என்றாலும், அவர் தற்போது ஈரோடு சாஸ்திரி நகர், ரெயில்வே காலனி, பாப்பாங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் சொந்தமாக ஆட்டோ வைத்து வேலை பார்த்து வருகிறார். ஆட்டோ டிரைவராக இருந்தாலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் திருடிக் கொண்டு செல்வதில் இவர் வல்லவர். ஈரோடு டவுன், மலையம்பாளையம் பகுதிகளில் முருகேசன் பல டூவீலர்களை திருடி உள்ளார். இதுவரை 25 வண்டிகளை முருகேசன் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து வருகிறோம்” என்றனர். டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.