Skip to main content

மாடுகள் விற்பனை மந்தம்.. வியாபாரிகள் ஏமாற்றம்..!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

k;l

 

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி சுற்றுப் பகுதியான நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். வாரம் தோறும் ஆயிரம் முதல் 1500  மாடுகள் விற்பனைக்காக இந்த சந்தைக்கு வரும்.பசுமாடுகள் ரூபாய் 30 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூபாய் 45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூபாய் 15,000 வரையும் விற்பனையாகும்.

 

அதேபோல், இங்கு வரத்தாகும் மாடுகளைக் கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில்  வந்து வாங்கி செல்வார்கள். கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஏப்ரல், 15ம் தேதி முதல் இந்த சந்தை கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்ததையும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையினை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 2 ந்தேதி முதல் நடத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. 

 

இதன்பேரில் கிட்டத்தட்ட நான்கரை மாதங்களுக்குப் பிறகு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை 2 ந் தேதி வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. முதல் நாள் என்பதால் சொற்ப அளவிலான மாடுகளே வரத்தானது. அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் முதல் நாள்  நடைபெற்ற சந்தைக்கு வரவில்லை. இதனால், மாடுகள் விற்பனையும் மந்தமாகவே நடந்தது. கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் கோபி, சத்தியமங்கலம், தாளாவடி, கொடுமுடி, சிவகிரி போன்ற பகுதிகளிலிருந்தும், நாமக்கல், கரூர் போன்ற சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாடுகளை வாகனங்களில் ஏற்றி விற்பனைக்குக் கொண்டு வந்தனர். எதிர்பார்த்த விற்பனை நடக்காததால் கொண்டு வந்த மாடுகளுடன் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசுவதையை நிறுத்தினால் பூமியிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்’ - குஜராத் நீதிமன்றம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Gujarat court has said that if cow slaughter stopped, all problems solved

 

கடந்த 2020 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலிருந்து பசு மாடுகளை கடத்தி வந்ததாகக் கூறி முகமது அமீன் என்பவர் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் உத்தரவில் நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

அதில், “பசுவதையை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது. பல நோய்களுக்குப் பசுவின் சிறுநீர் அருமருந்தாக உள்ளது” என்று தெரிவித்திருக்கின்றனர்.

 

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்றும் பசுக் காவலர்கள் என்ற பெயரில்., மாட்டு இறைச்சி விற்பவர்கள், சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நீதிமன்றத்தின் இந்தக் கருத்து வியப்பாக இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்து எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.  

 

 

Next Story

பசுவைக் கொன்றால் பத்தாண்டுகள் சிறை!!! அவசர சட்டம் கொண்டுவந்த பாஜக அரசு...

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

new act in uttarpradesh to prevent cow slaughter

 

பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


பசுவதைக்கு எதிரான உத்தரப்பிரதேசத்தின் சட்டத்தில், தவறு செய்பவர்கள் தப்பிப்பதற்கான வழிகள் இருப்பதாகக்கூறி பசுவதையை தடுப்பதற்காக புதிய அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது உத்தரப்பிரதேச அரசு. புதிய சட்டத்தின்படி, பசுவைக் கொன்றால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பசுவுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்காக தற்போதுள்ள ரூ .10,000 அபராதம்,  ரூ .3 லட்சம் முதல் ரூ .5 லட்சம் வரை விதிக்கப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. 5 பி என்ற புதிய பிரிவை சேர்த்து, அதன்மூலம், பசுவுக்குக் காயம் ஏற்படுத்துவோர்களுக்கு ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், விதிகளை மீறி பசுக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூ .1 லட்சம் முதல் ரூ .3 லட்சம் வரை அபராதமும் விதிக்கிறது. மேலும், பசுவுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்காததும் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.