Skip to main content

நாங்குநேரியில் மீண்டும் பரபரப்பு; அரசு பள்ளி சுவற்றில் சாதிய வாசகங்கள்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 Caste slogans on government school walls resurgence in Nanguneri

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவம், சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியுள்ளது. இந்தப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறான வாசகங்களை எழுதியிருந்தனர்.

 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இது குறித்து நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், நாங்குநேரி துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, காவல் ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு சுவற்றில் எழுதியிருந்த அவதூறு வாசகங்களை அழித்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் 4 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 மாணவர்களையும் கைது செய்தனர். கைதான 4 மாணவர்களும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறாக எழுதியிருந்த 4 மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Government school teacher arrested under pocso

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன. 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.