சவ ஊர்வலத்தின் போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட சாதி மோதலால் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ilaiyangudi

சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ளது இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட புனைப்பனேந்தல் கிராமம். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள இவ்வூரில் 3 இனப் பிரிவினர் வசித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே இக்கிராமத்தில் குறிப்பிட்ட இருபிரிவினரிடையே அடிக்கடி சிறு சிறு சண்டைகள் தொடங்கி அடிதடி வரை நீள்வதுண்டு. அரசும் ஏனோ இதனைக் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் இறந்ததால் அவருடைய உயிரற்ற உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஊர்வலமாக செல்லும் போது வெடி வெடித்துள்ளனர். அந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொருப் பிரிவினரோ, " அமைதியாக செல்லுங்கள்.! இந்தப் பகுதியில் வெடி வெடிக்கக் கூடாது.!" எனக் கட்டளையிட இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இளமனூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சத்தியேந்திரனின் தலையில் காயம் ஏற்பட்டது. அத்துடன் ஊர்ப்பெரியவர்கள் தலையிட மோதலும் அப்போது கைவிடப்பட்டது.

இது இப்படியிருக்க, நேற்றிரவு இளமனூர் மற்றும் புனைப்பனேந்தலை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் புனைப்பனேந்தல் ஊருக்குள் புகுந்து எதிர் தரப்பினரை சேர்ந்த வீடுகளை அடித்து நொறுக்கினர். வீடுகள் மட்டுமல்ல கண்ணில் கண்ட பொருட்களையும் அடித்து உடைத்தனர். இத்தாக்குதலில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வழக்கறிஞரின் வீடும், அவரது காரும் தப்பவில்லை. தகவலறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு கலவரம் ஏற்படாமல் இருக்க, அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் இங்கு மயான அமைதி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.