
சென்னை கோடம்பாக்கத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் தான் இங்கு பணியாற்றி வந்த கணித ஆசிரியர் மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரிடம் சாதிய ரீதியாகப் பேசியதாகவும், சாதி ரீதியாக நடந்து கொண்டதாகும் குற்றச்சாட்டு இருந்தது. இதனையடுத்து இந்த இரு ஆசிரியர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் மாலதி உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தவறு செய்யாத தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பகுதி பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தகவல் இருந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களும் அங்கிருந்த ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் எல்லாம் பறையடிக்கத் தான் லாக்கி. நீங்க எல்லாம் தாளம் தட்டம் தான் லாக்கி. நீங்க எல்லாம் படிக்கவில்லை என்று யார் கேட்டார்கள். என் பையனிடம் வேலை வாங்கினார்கள். மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருந்தது. இதனைத் தலைமை ஆசிரியர் மாலதி தடுத்தார். அதற்காகத் தான் இந்த பிரச்சனை நடக்கிறது. தலைமை ஆசிரியர் மாலதி இங்கு பணியாற்றினால் தேர்வு முடிவுகளை அதிகரிக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகத் தலைமை ஆசிரியர் மாலதியை மாற்றி விட்டனர்” எனத் தெரிவித்தார்.