Advertisment

100 நாள் வேலையில் சாதிய பாகுபாடு; பட்டிலின மக்களுக்கு ஊதியத்தை குறைத்து கொடுக்கும் அவலம்!

Advertisment

Caste discrimination in 100 day job in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அமைந்துள்ளது தொட்டியம் கிராமம். இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள் சின்னசேலம் பகுதியில் இருந்து தொட்டியம் கிராமம் செல்லும் சாலையில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களுடைய வாழ்கையை மேம்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த 100 நாள் பணியில் பல்வேறு முறைகேடுகளும் சாதிய பாகுபாடுகளும் தொடர்ந்து நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஊராட்சி செயலாளராக வேலை செய்து வருகிறார். இவர் 100 நாள் பணியில் ஈடுபடும் பெண்களுக்குக் கூலி வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வேலையாட்களை ஒரே மாதிரியாக பார்க்க விரும்பாத சங்கர், 100 நாள் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு 300 ரூபாய் கூலி வழங்குவதாகவும், பட்டியலின மக்களுக்கு 250 ரூபாய் மட்டும் வழங்குவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

Advertisment

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் விரக்தியடைந்த பெண்கள் ஊராட்சி செயலாளர் சங்கரை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பேசும்போது, "எதுக்காக எங்களுக்கு மட்டும் 250 ரூபா கொடுக்குறீங்க. அந்த தெரு ஆளுங்களுக்கு 300 ரூபா கொடுக்குறீங்க. உள்ள இறங்கி வேலை செய்யுறவங்களுக்கு 250 ரூபா? வெறும் மண்ணு வெட்டுறவங்களுக்கு 300 ரூபாவா? எனப் பல கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த சங்கர், "நீங்க வேலை செஞ்சா தான் உங்களுக்குக் கூலி போடுவோம். இந்த சின்ன வேலைக்குலாம் 300 ரூபா கொடுக்க முடியாது" எனக் கூறினார். இதை கேட்டவுடன் எங்களுக்கு மட்டும் கஷ்டமான வேலையா கொடுக்குறீங்க. ஆனா அவங்களுக்கு சின்ன சின்ன வேலையா கொடுக்குறீங்க" என திருப்பி கேட்டனர். அதற்கும் கோபமாக பேசிய சங்கர், "அங்கெல்லாம் உங்களை விட்டாத்தான் வேலை நடக்கும். அதுனால தான் உங்களுக்குக் கஷ்டமான வேலையா கொடுக்குறோம்" என சர்வ சாதாரணமாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், இருதரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென கூட்டத்துக்குள் வந்த நபர் ஒருவர், "எல்லாரும் கிளம்புங்க கிளம்புங்க.. போயிட்டே இருங்க.. நிக்காதீங்க. உங்களுக்கு 300 ரூபா கொடுக்க முடியாது. 4 மணி ஆயிடுச்சி. எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க" என மிரட்டும் தொனியில் அவர்களை விரட்டியடித்தார். தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுபோன்று சாதியை பாகுபாடு பார்க்கும் ஊராட்சி செயலாளரைப் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

kallakurichi workers
இதையும் படியுங்கள்
Subscribe