
‘சாதிக் கண்’ கொண்டு பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தால், தமிழகத்தில் எந்த ஒரு கிராமமும் நிம்மதியாக இருந்துவிட முடியாது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேண்டுராயபுரமும், துலுக்கபட்டியும் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
என்ன விவகாரம் இது?
வேண்டுராயபுரம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக ஆடு, கோழிகள் திருடுபோவது வழக்கமாக இருந்திருக்கிறது. இதுகுறித்து மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று (30.04.2021) அதிகாலை 04.00 மணியளவில், அந்த வழியாக துலுக்கபட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரனும், சதீஸ்வரனும் டூ வீலரில் வந்திருக்கின்றனர். இருவரையும் அந்தக் கிராமத்தினர் பிடித்து வைத்துக்கொண்டு, “யாருடா நீங்க? எந்த ஏரியா?” என்று விசாரித்துள்ளனர். அவர்கள், தங்கள் கிராமத்தின் பெயரைச் சொல்ல, “இந்த நேரத்துல எங்க ஏரியா வழியா எதுக்கு வந்தீங்க? அதான், வேற ரூட் இருக்குல்ல?” என்று விசாரித்தபடியே, மாறி மாறி தாக்கியதோடு, மல்லி காவல் நிலையத்துக்கும் இழுத்துச் சென்றனர். அங்கிருந்த போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர்.

சாதி அடிப்படையில் தங்களைத் தாக்கியதாக மாரீஸ்வரனுக்கும், சதீஸ்வரனுக்கும் மன உளைச்சல் ஏற்பட, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘அட்மிட்’ ஆனார்கள். இந்த விவகாரம், துலுக்கபட்டி கிராமத்தினரை வேகப்படுத்த, அடித்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிவகாசி - விளாம்பட்டி பிரதான சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். உடனே, காவல்துறையினர் குவிக்கப்பட்டு கிராமத்தினரைக் கலைந்துபோகும்படி எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் ஓடிவர, தடுக்க முற்பட்ட பெண் காவலர் தடுமாறி கீழே விழுந்தார். ஹேர்பின் குத்தியதால் ரத்தம் கசிந்து முகத்தில் வழிய, ‘பெண் காவலர் மண்டை உடைந்தது’ என்று அந்த இடம் பரபரப்பானது. ‘அய்யோ! போலீஸ் விவகாரமாகிவிட்டதே!’ என்று அதிர்ச்சியடைந்த கூட்டத்தினரை, காவல்துறையால் கலைக்க முடிந்தது.
துலுக்கப்பட்டி கிராமத்தினர் தரப்பில் “ரெண்டு பேரும் வேலைக்குப் போன பசங்க. இவங்க டூ வீலர்ல சாதி அடையாளம் தெரியற மாதிரி இன்டிகேட்டர் லைட் செட் பண்ணிருந்தாங்க. இது வேண்டுராயபுரத்துல உள்ளவங்களுக்குப் பொறுக்கல. ஏற்கனவே ஆடு, கோழி திருடுபோன கோபத்துல இருந்தவங்க, ஊரைக் காவல் காக்கணும்னு ரவுண்ட்ஸ் வந்திருக்காங்க. அப்பத்தான் அவங்க கண்ணுல எங்க பசங்க சிக்கி அடி வாங்கிருக்காங்க.” என்றனர்.

மல்லி காவல் நிலையத்தில், பட்டியலின இளைஞர்களை அடித்ததாக, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வேண்டுராயபுரம் கிராமத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. சாலை மறியல் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய துலுக்கபட்டி கிராமத்தினரும் வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.