Cash prize for chess winner Gukesh  Chief Minister's announcement 

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். அதாவது குகேஷ் தனது 58வது நகர்த்திலில் வெற்றி வாகையை சூடினார். குகேஷ். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடரபாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் அனைவரும் பாராட்டும் வண்ணம் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.

Advertisment

தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் நேற்று (12.12.2024) நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த. டி. குகேஷை முன்னதாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வாழ்த்தினார். முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின். அதோடு, தொலைபேசி வாயிலாகவும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷூக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment