கேரம் வீராங்கனை காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரொக்கப் பரிசு!

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதற்கான காசோலையினை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (17.12.2024) வழங்கியிருந்தார். இதற்கிடையே உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை காசிமா கலந்துகொண்டு 3 தங்கப்பதங்களை வென்றிருந்தார். இத்தகைய சூழலில் தான் அரசு சார்பில் ஊக்கத்தொகை இவருக்கு வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியிருந்தது. சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடி பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதே போன்று வீராங்கனைகள் மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கினார்.

இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

Cash prize for carrom player Kasima on behalf of TN govt

வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார். அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.

எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தங்கை எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடி, வி.மித்ராவுக்கு ரூ.50 லட்சம், கே.நாகஜோதிக்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம். தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் திமுக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

carrom player PRIZE Tamil Nadu government world championship
இதையும் படியுங்கள்
Subscribe