Cases filed against OPS and Udayanidhi election victory postponed to August 9

Advertisment

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக்கோரி வாக்காளர் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கில், "மனைவி விஜயலட்சுமி வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், அதற்காக காட்டப்பட்ட சொத்தின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது" என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து வாதிடும்படி மனுதாரர் மிலானி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதேபோல, உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "வைப்புத் தொகை செலுத்தாவிட்டால், தேர்தல் வழக்கு தள்ளுபடியாகி, வெற்றி பெற்றது செல்லும் என அறிவிக்க நேரிடும்" எனத் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்த உச்ச நீதிமன்ற உத்தரவைப் படித்துவிட்டு விளக்கமளிக்க மனுதாரர் எம்.எல்.ரவிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். உதயநிதிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதாக எம்.எல்.ரவி தாக்கல் செய்த மற்றொரு மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவுசெய்வதற்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த வழக்கும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.