Skip to main content

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து... நக்கீரர் சிலை முன்பு மகிழ்ச்சியை பரிமாறிய விவசாயிகள்!!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

Cases filed against farmers including Minister canceled ... Farmers' celebration

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், தென் மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள்மீது கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்த அறிவிப்பைக் கேட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுபற்றிய செய்திகள் நக்கீரன் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (24.06.2021) தமிழ்நாடு அரசு மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்கு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட ஆடியோவில், ஹைட்ரோ கார்பன் வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

Cases filed against farmers including Minister canceled ... Farmers' celebration

 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் போராட்ட வழக்கில் உள்ளவர்கள் நக்கீரர் சிலை முன்பு திரண்டு மரக்கன்றுகளை வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். இதுகுறித்து கண்ணன், வடகாடு சரவணன் ஆகியோர் கூறும்போது, “விவசாயிகளைப் பாதிக்கும் திட்டமான நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக கீரமங்கலம், வடகாடு, கைகாட்டி, ஆலங்குடி, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களில் போராடிய தற்போதைய அமைச்சர் மெய்யநாதன் உள்பட நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். இதற்காக தொடர்ந்து நீதிமன்றம் சென்று வருகிறோம். தற்போது இந்த வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல ஒ.என்.ஜி.சி.யால் அமைக்கப்பட்டு விவசாயிகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளையும் பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.