/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-in_0.jpg)
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்குகளில் தமிழக அரசு, யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதுபோல், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர்களது மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றைக் காப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளோம். அரசின் அறிவிப்பால் அனைத்துப் பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை, அரசின் அறிவிப்பு சோர்வடையச் செய்யும். மேலும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளது.
25% மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி, தோல்வி அடைந்தவர்களும் 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால், கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளது. தேர்வுகளில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைப்பது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asmbly.jpg)
தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்தது தவறு. அரசின் முடிவை கைவிடக்கோரி மனு அளித்தும் பலனில்லாததால், உடனடியாக அரசின் முடிவிற்குத் தடைவிதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வழக்கறிஞர் ராம்குமார் தொடர்ந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தரப்பிலும், இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அதனையும் இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், இரு வழக்குகளையும் இணைத்து விசாரித்தனர். அப்போது மனுதாரர் ராம்குமார் தரப்பில் வழக்கறிஞர் சங்கர், பாலகுருசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், தமிழக அரசுக்கு இல்லை என்றும் வாதிட்டனர். யு.ஜி.சி உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், ஏ.ஐ.சி.டி.இ.-யும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இறுதி பருவத் தேர்வு மாணவர்களைத்தான் தேர்வில்லாமல் தேர்ச்சி பெறச் செய்யகூடாது என அறிவித்துள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில்தான் பிற மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு வழக்குகள் குறித்தும் தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)