A case where the farmer was farmer issue Police action

Advertisment

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

அதே சமயம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.