Skip to main content

தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
high

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தினகரன் ஆதரவு வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமரேந்திர்சிங் சரண், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய துரிதமாக செயல்பட்ட சபாநாயகர், அரசுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பான பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராக பல மாதங்களுக்கு முன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார். கட்சியில் பிளவு ஏற்பட்டு, தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், பன்னீர்செல்வம் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை எனவும் அமரேந்திர சிங் சரண் வாதிட்டார். சபாநாயகர் மீது புகார் கூறும்போது, அவர்தான் நேரடியாக பதில் சொல்ல வேண்டுமே தவிர மூன்றாம் நபர் மூலம் பதிலளிக்க முடியாது என வாதத்தில் குறிப்பிட்டார்.

 

அதன் பின்னர் முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்களிக்க வேண்டும் என அரசு கொறடா உத்தரவே பிறப்பிக்காத நிலையில், அதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீறியதாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

 

அப்போது சக்கரபாணி மற்றும் வெற்றிவேல் ஆகியோரின் வழக்கறிஞர்கள் குறுக்கிட்டு, பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது, ஆனால் அப்படி உத்தரவு பிறப்பிக்கவில்லை என தற்போது கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என வாதிட்டனர்.

 

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

- சி.ஜீவா பாரதி
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓரிரு வாரத்தில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
official announcement about the alliance will be made in a week Anbumani

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் நேற்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

அதே சமயம் அ.தி.மு.க கூட்டணியில் தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி ஆகிய 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதியை பா.ம.க. கேட்பதாகவும், ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க அ.தி.மு.க. தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டது. அதோடு தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் பா.ம.க. போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கையை பா.ம.க. ஏற்க தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், வடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. கூட்டணி குறித்து தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பொய்யான செய்திகள். கூட்டணி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் வதந்திகள். கூட்டணி குறித்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் பா.ம.க. தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்” எனத் தெரிவித்தார். 

Next Story

‘ஷேக் ஷாஜகானை கட்டாயம் கைது செய்ய வேண்டும்’ - மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
- Court orders West Bengal government to Sheikh Shahjahan must be arrested

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. 

இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (26-02-24) நடந்தது. அப்போது, ‘சந்தேஷ்காலி பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 42 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நான்கு ஆண்டுகளாகக் கைது செய்யப்படாதது ஆச்சரியமாக உள்ளது. கைதுக்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செய்தித்தாள்களில் தகவல் வெளியிட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.