ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தி்ல் உள்ள பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட கோரி வழக்கு

12:33 AM Mar 21, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ராமநாதபுரம் மாவட்டத்தி்ல் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், தொடக்கக்கல்வி இயக்குனர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்" முதுகுளத்தூர் டி.கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்பபள்ளியின் மேற்கூரை 2.2.2018-ல் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். இப்பள்ளி கட்டப்பட்டு 15 ஆண்டுக்கு மேலாகிறது.இந்த கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. தற்போது இப்பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கு அரசு இ.சேவை மையத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. டி.கிருஷ்ணாபுரம் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 மழலையர் பள்ளிகள், 934 தொடக்கப்பள்ளிகள், 215 உயர் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல பள்ளிகளின் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் தங்கள் குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு அனுப்புகின்றனர்.

எனவே டி.கிருஷ்ணாபுரம் ஆரம்ப பள்ளியை மறுசீரமைப்பு செய்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டவும், ஆர்எஸ் மடை போப்ஜான்பால் பள்ளி, ஏர்வாடி பாலர் பள்ளி கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யவும், ராமநாதபுரம் மாவட்டத்தி்ல் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்யவும், காயமடைந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனு தொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், தொடக்கக்கல்வி இயக்குனர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT