Dismissal of a case of charitable funds to start a television station in Thirukovil

Advertisment

திருக்கோவில் தொலைக்காட்சி துவங்குவதற்கு, இந்து சமய அறநிலையத்துறையின் பொதுநல நிதியைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் மூலதன செலவில், திருக்கோவில் என்ற பெயரில் தொலைக்காட்சி துவங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அறநிலையத்துறை பொது நல நிதியை, தொலைக்காட்சி துவங்கபயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, கடந்த டிசம்பர் மாதம் விசாரித்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி துவங்கப்படுவதாகவும், அறநிலையத்துறையின் பொதுநல நிதியில் இருந்து கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே நிதியைப் பெற முடியும் எனவும் வாதிடப்பட்டது. மேலும், பொது நல நிதியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆட்சேபங்கள் கோர வேண்டும் எனவும், இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், திருக்கோவில் தொலைக்காட்சி துவங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், எந்த விதிகளும் மீறப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.

கோவில்களுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால்தான் ஆட்சேபங்கள் பெற வேண்டுமே தவிர, தொலைக்காட்சி துவங்குவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஏற்கனவே தொலைக்காட்சி துவங்குவதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கில் நேற்று (18 பிப்.) தீர்ப்பளித்த நீதிபதிகள், திருக்கோவில் தொலைக்காட்சிக்கு அறநிலையத்துறையின் பொதுநல நிதியைப் பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.