'A case should be filed against Andhra Govt..' - Tamilnadu farmers insist

ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திரமாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிகுப்பம் பகுதியில் அடிக்கல் நாட்டினார். இந்தத் தடுப்பணை ரூ.215 கோடியில் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் மூலம், ஆந்திர அரசு 0.6 டி.எம்.சி. நீரை தேக்கிவைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நீரினை குப்பம் தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பூர்த்தி செய்யவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 1892 மைசூர் ராஜ்ஜியம் மற்றும் சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தை மீறி அராஜக போக்குடன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளது.

Advertisment

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தனித்துவமாக செயல்படும் ஆந்திர அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் முல்லை மற்றும் அசோகன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்கள் கலந்து கொண்டன.

Advertisment