பார்வை மாற்றுத் திறனாளிகள் தேர்வு வழக்கு; அரசாணையை ஏற்ற உயர் நீதிமன்றம்

Case of selection of visually impaired persons; High Court

தேர்வெழுதும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பாகத்தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அது தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கண் பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கக் கோரியும், தேர்வு எழுதக் கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019-ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கண்பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அது சம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்து நேற்று (செப்டம்பர் 21) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் எனத்தெரிவிக்கப்பட்டு, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத்தெரிவித்தனர். அதேசமயம், தேர்வர்களைவிட உதவியாளர்களின் கல்வித் தகுதி குறைவாக இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை அமல்படுத்தும்போது உள்ள இதுபோன்ற சிக்கல்கள் கலையப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe