Skip to main content

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு கோரிய வழக்கு! – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 05/10/2020 | Edited on 06/10/2020

 

Case seeking separate reservation for third gender in education and employment

 

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருநங்கை, திருநம்பி எனும் மூன்றாம் பாலினத்தவர்களை, தனி பிரிவாகப் பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர், பட்டியலின வகுப்பைச்  சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத்துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை.’ எனக்  குற்றம்சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.