Case seeking separate reservation for third gender in education and employment

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருநங்கை, திருநம்பி எனும் மூன்றாம் பாலினத்தவர்களை, தனி பிரிவாகப் பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத்துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை.’ எனக் குற்றம்சாட்டினார்.

Advertisment

இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.