
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தெக்குப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவில் உள்ள தெக்குப்பட்டு கிராம எருது விடும் விழாக்குழு தலைவர் துரைசாமி தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன், பச்சையம்மன் மற்றும் ஓம்சக்தி அம்மனுக்கு, ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் தை அல்லது பங்குனி மாதங்களில், அபிஷேக விழாவும், எருது விடும் விழாவும் நடத்தப்படும்.
இந்த ஆண்டு எருது விடும் விழாவுக்கு நேரில் ஆய்வு செய்து அரசு அனுமதியளித்த நிலையில், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, விழாவை நடத்த அனுமதிக்க முடியாது என அம்பலூர் போலீசார் வாய்மொழியாகத் தெரிவித்தனர். இதையடுத்து, விழாவுக்கு அனுமதி கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லாததால், இந்த ஆண்டு எருது விடும் விழாவுக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி இருவர் அடங்கிய அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டது.