Skip to main content

வழக்கறிஞர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கக் கோரி வழக்கு... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Case seeking corona relief assistance to lawyers; Central and state governments ordered to respond

 

கரோனா தொற்று பாதித்து பலியான வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகளுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கரோனா காரணமாக தமிழ்நாடு முழுவதும் 64 ஆயிரம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 230 வழக்கறிஞர்கள் கரோனா பாதித்துப் பலியாகியுள்ளனர் எனவும், கரோனாவுக்குப் பலியான தமிழ்நாடு அரசு ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவியாக 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்வரை அரசு வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான வழக்கறிஞர்கள், கிளார்க்குகளின் குடும்பத்தினர் எந்த நிதியுதவியும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகளின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், இந்திய மற்றும் மாநில பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்