/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sc-art-new_30.jpg)
கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்குப் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதே சமயம் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தனித்தனியாகசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டுமான பணிகளை தொடர தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரியும் வினோத் ராகவேந்திரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (20.01.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வள்ளலார் சர்வதேச மையத்தை கட்டுவது சட்டத்தை மீறுவது ஆகும். அதோடு வள்ளலாரின் விருப்பத்திற்கு எதிரானது ஆகும். ஆன்மிக இடத்தை வணிகமயமாக்க முடியாது. ஏழைகளின் முன்னேற்றத்திற்காகவே இந்த இடம் உள்ளது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “வள்ளலார் சர்வதேச மையத்தின் புதிய கட்டுமான கட்டடத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதையே நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)