கடலூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Cuddalore Collector important order by High Cour

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “தமிழக அரசு சார்பில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் அமைக்க வள்ளலார் சர்வதேச மையத்திற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.08.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர், “சத்தியஞான சபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் வழிப்பாட்டு தலத்திற்கு உரியது. எனவே இந்த இடத்தில் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரரின் தரப்பு வழக்கறிஞரை நோக்கி, “இது போன்ற தகவல்களைக் குற்றச்சாட்டுகளாகச் சொல்லாதீர்கள். இதில் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மாநில அரசின் பொறுப்பு ஆகும்.

Cuddalore Collector important order by High Cour

கூட்டநெரிசலைத் தவிர்க்கவும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட குறைந்தபட்ச சுகாதார வசதிகளைச் செய்துதர வேண்டியது மாநில அரசின் கடமையாகும். வரும் காலங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசின் மீது தானே குறை சொல்வீர்கள். கோயிலுக்குப் பக்தர்கள் 106 ஏக்கர் நிலங்களைத் தானமாகக் கொடுத்த நிலையில் அரசு தரப்பில் 71 ஏக்கர் நிலம் மட்டுமே எப்படி உள்ளது” எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் நடராஜன், “ கடந்த 1938 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலைக் கட்டுப்பாட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. 6.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதோடு 27 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் தான் இது போன்ற வள்ளலார் சர்வதேச மையத்திற்கான கட்டுமான பணிக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Cuddalore Collector important order by High Cour

இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “சத்திய ஞான சபைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஒரு மாதத்திற்குள் அடையாளம் காண வேண்டும் எனக் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து இந்த வழக்கை நீதிபதிகள் செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Cuddalore vadalore vallalar
இதையும் படியுங்கள்
Subscribe