இளைஞர் அஜித்குமார் தொடர்பான வழக்கு; அரசு தரப்புக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

madurai-high-court

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (01.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது வெறும் கண் துடைப்பு தான்” எனத் தெரிவித்தனர். அதற்கு அரசு தரப்பில், “உயர் அதிகாரிகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதிகள், “அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருக்கிறது. எதை வைத்து அடித்தார்கள். அவரை எப்படி எல்லாம் காயப்படுத்தப்பட்டார்கள். அவருடைய அந்தரங்க உறுப்பிலும், முகத்திலும் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். கல்வி அறிவு உள்ள காலத்தில் போலீசார் இவ்வளவு தூரம் நடந்துகொள்வது பெரிய வியப்பாக உள்ளது. இந்த சம்பவத்தில் குடும்பத்தினர் பேசாமல் இருப்பதற்காக குடும்பத்தினரோடு சமரசம் பேசுவதற்காக உள்ளூர் திமுக நிர்வாகிகள் டி.எஸ்.பி. முன்னிலையிலேயே 50 லட்ச ரூபாய் பேரம் பேசியுள்ளனர். அஜித் குமாரின் தம்பிக்கு, அஜித்குமார் பார்த்த அதே வேலையைத் தம்பிக்குத் தருகிறோம். 

இது போன்ற பேரங்கள் எல்லாம் பேசப்பட்டுள்ளது. இது போன்று இனி வரக்கூடிய காலங்களில் நடக்கக் கூடாது. இந்த வழக்கிற்குத் தேவையான தடயங்களைச் சேகரிக்க வேண்டும். ஆனால் சம்பவம் நடந்த இடங்களைப் பாதுகாக்கவே இல்லை. அஜித்குமார் உயிரிழந்திருந்த இடத்தில் அவருடைய இரத்த கறை, சிறுநீர் போன்றவற்றின் மாதிரிகள் எல்லாம் சேகரிக்க வேண்டும். ஆனால் அவற்றை எல்லாம் சேகரிக்கவே இல்லை. சம்பவம் நடந்த இடத்தையே பாதுகாக்கவில்லை” எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், “இந்த சம்பவத்தில் பல புகார்கள் வருகிறது. இதனை  ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா? என அரசு தரப்பிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க முடியுமா?” என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்கள். அதற்கு அரசு தரப்பில், “இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. எதிர்த்தரப்பு இதனை அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “நீங்கள் எதிர்த் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்து இருப்பீர்கள். சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை சம்பவத்தை யாரும் மறக்க முடியாது” என்ற கருத்தைப் பதிவு செய்தனர். 

madurai high court sivagangai tn govt
இதையும் படியுங்கள்
Subscribe