/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4021.jpg)
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 08.06.2025 அன்று இரவு ஒரு பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது, “பேருந்து நிலைய மேலாளர் உத்தரவின்றி பேருந்தைக் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக இயக்க முடியாது. எனவே பேருந்து மேலாளரிடம் அனுமதி வாங்க வேண்டும்” என பயணிகளிடம் ஓட்டுநர் கணேசன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பயணிகளைத் தூண்டி விடுவதாகக் கூறி மேலாளர் மாரிமுத்து என்பவர் ஓட்டுநர் கணேசனைக் காலணியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து மாரிமுத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட உதவி மேலாளராக இருந்த மாரிமுத்து பேசுகிறேன். நேற்று நடந்த சம்பவத்திற்கு தாராபுரம் ஓட்டுநர் கணேசன் வசம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வசம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் தமிழக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் எந்த ரணமும் வர வேண்டாம். நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பைக் காணிக்கையாக்குகிறேன். நன்றி” எனக் கை கூப்பியவாறே மன்னிப்பு கோரி இருந்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக நான்கு பேர் மீது 5 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரை காலணியால் அடித்த அவதூறாக பேசியது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)