சேலம் மத்தியச் சிறையில் கடந்த வாரம் நடந்த திடீர் சோதனையில், 7வது தொகுதியில் உள்ள கைதிகள் அறைக்கு வெளியே மண்ணுக்குள் சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
ஒரு பிளாஸ்டிக் குவளையில் 2 லிட்டர் தண்ணீர் சில பொருட்களைக் கலந்து காற்றுப் புகாதவாறு இறுக்கமாக மூடி, மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததை சிறைக்காவலர்கள் கண்டுபிடித்தனர். ஆயுள் தண்டனைக் கைதி மாங்கா பிரபு என்கிற பிரபு என்பவர்தான் சக கைதிகளுடன் சேர்ந்து சாராய ஊறல் போட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரபு மற்றும் அவருடைய கூட்டாளிகளுமான ஐயனார், ஐயந்துரை ஆகியோரை மாநகர ஆயுதப்படை காவலர்கள் சேலம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வாயில் அருகே சென்றபோது கைதிகள் மூவரும் விதிகளை மீறி, திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சாராய ஊறல் போட்டதாக தங்கள் மீது சிறைத்துறை நிர்வாகம் பொய் புகார் அளிப்பதாகக் கூறி, இது தொடர்பாக தங்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், கைதிகள் மூவரும் தங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர்களை வழிக்காவலாக அழைத்துச் சென்ற ஆயுதப்படைக் காவலர்கள் சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.