ADVERTISEMENT

அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களை தமிழில் வெளியிடக் கோரி வழக்கு! – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

03:42 PM Dec 17, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என, இரட்டை மொழிக் கொள்கை பின்பற்றப்பட்ட போதிலும், தொன்மையான தமிழ்மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியன, ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகிறது.


சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள், தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களைத் தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழக டி.ஜி.பி., காவல் துறை அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில், கடிதங்களைத் தமிழில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு நான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.’ என கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மார்ச் 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT