/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/highcourt-in_11.jpg)
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட்களை இலவசமாக வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீர் பாக்கெட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் வினியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரோனா தொற்று பாதித்துப் பலியாவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களைக் கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் எனவும் இதுசம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கை மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவும், கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)