/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1111 highcourt_14.jpg)
மாணவர்களுக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளதால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சூளைமேட்டைசேர்ந்த வக்கீல் ஸ்டாலின் ராஜா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். ‘நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் கரோனாவைதடுக்க அரசு திணறி வருகிறது.
தமிழகத்தில் 200 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படாத நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 -விற்கு கரோனா ஊரடங்கால் நடத்தப்படாத ஒரு தேர்வு, ஜூன் 1 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வருகிறார்கள். இவர்களுக்கு போக்குவரத்து வசதி குறித்து அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். எனவே, கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை தேர்வை நடத்தக்கூடாது. தேர்வை தள்ளிவைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Follow Us